தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக ‘தமிழ் மறவன்’ தேர்வு

தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘தமிழ் மறவன்’ வண்ணத்துப்பூச்சி இனங்களில் அதிவேக மாக பறக்கும் திறன் கொண்டது என்ப தால் கலாச்சாரத்தையும் வீரத்தையும் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. இதுவே, மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்படவும் காரணமாக இருந்துள் ளது. ஒவ்வொரு நாடும், மாநிலமும் தங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ப அடையாளச் சின்னங் களை அறிவிப்பது வழக்கம். அதன்படி தமிழக அரசின் சின்னமாக வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம், மாநில விலங்காக நீலகிரி வரையாடு, மாநில பறவையாக மரகதப் புறா, மாநில மல ராக செங்காந்தள், மாநில மரமாக பனை, மாநில விளையாட்டாக சடுகுடு (கபடி) மாநில பழமாக பலா, மாநில நடனமாக பரதநாட்டியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தமிழகத்தில் அதிகமாக வசிக்கக்கூடிய ‘தமிழ் மறவன்’ (tamil yeoman) என்ற வகை வண்ணத்துப்பூச்சியை, மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கலாம் என தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலரிடம் இருந்து கடந்த ஜன.31-ம் தேதி அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்த அரசு, ‘தமிழ் மறவன்’ வகை வண்ணத்துப்பூச்சியை தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, கடந்த 26-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கன்னியாகுமரியில் அகத்தியர் மலை, மதுரையில் அழகர்மலை, பொள்ளாச்சியில் ஆனைமலை, கோவையில் கல்லார், நீலகிரியில் குன்னூர், கோத்தகிரி, கொடைக்கானலில் பேரிஜம், சேலத்தில் கொல்லிமலை, தேனியில் மேகமலை, சென்னையில் அண்ணா விலங்கியல் பூங்கா, திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உட்பட 32 இடங்கள், வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் வசிக்கக்கூடிய ‘ஹாட்ஸ்பாட்’ எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்களில் சுமார் 324 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில்... இதேபோல உலகிலுள்ள மொத்த வண்ணத்துப்பூச்சிகளில் 36 வகையான வண்ணத்துப்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. அதில் 5 வகை வண்ணத்துப்பூச்சிகளுக்கு தமிழ் என்ற அடைமொழியுடன் பெயரிடப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ‘தமிழ் மறவன்’ வகை. Cirrochora thais எனும் அறிவியல் பெயருடைய இந்த வகை வண்ணத்துப் பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழக் கூடியவை. அதேபோல, தென்னிந்தியாவில் உள்ள மிகவும் அழகான,வண்ணமயமான வண்ணத் துப்பூச்சிகளுள் இதுவும் ஒன்று. இதுதவிர தமிழ் கலாச்சாரம், வீரத்தை குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளதாலும், மாநிலத்தின் மொழியை தனது பெயரில் சூடியுள்ளதாலும் இதை மாநில வண் ணத்துப்பூச்சியாக தேர்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் தற்போது அதற்கான அரசாணை வெளி யிடப்பட்டிருக்கிறது’’ என்றனர். கோவையைச் சேர்ந்த ஆக்ட் ஃபார் பட்டர்பிளைஸ் அமைப்பின் நிறுவனரான பி.மோகன் பிரசாத் கூறும்போது, ‘‘மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வு செய்வதற் காக தமிழக வனத்துறையின் ஐஎப்எஸ் அலுவலர்கள் சதீஷ், ஆனந்த் சிவஜோதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். மகாராஷ்டிராவில் புளூ மோர்மன், உத்தரகாண்ட்டில் காமன் பீகாக், கர்நாடகாவில் சதர்ன் பேர்டுவிங்க், கேரளாவில் மலபார் பாண்டடு பீகாக் ஆகிய இனங்கள் மாநில வண்ணத்துப்பூச்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ‘தமிழ் மறவன்’ வகையை அறிவித்துள்ளது. அதிவேகமாக பறந்து செல்லக்கூடிய இனம் என்பதால், வீரன் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு ‘தமிழ் மறவன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது’’ என்றார்.

Comments