Tuesday 9 October 2018

CURRENT AFFAIRS 09.10.18

புதிய தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3 அன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவரின் பதவிகாலம் 2019, நவம்பர் 17 அன்று நிறைவடைகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நபர் இவர். நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் உள்ள 5000 நீதிபதிகளுக்கான இடங்கள் முன்னுரிமை கொடுத்து நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74-க்குக் கீழே முதன்முறையாக அக்டோபர் 5 அன்று வீழ்ச்சியடைந்தது. ரிசர்வ் வங்கி தன் பணக் கொள்கையை அறிவித்தவுடன், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.20 ஆக வீழ்ச்சியடைந்தது. கடந்த மூன்று மாதங்களாகவே ரூபாய் மதிப்பு பல்வேறு காரணிகளால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவருகிறது.

இந்தியா-ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்

இந்தியா-ரஷ்யா இடையே 543 கோடி அமெரிக்க டாலர் (ரூ. 40 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஐந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 5 அன்று டெல்லியில் கையெழுத்தானது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைப்பு

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50 குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அக்டோபர் 4 அன்று அறிவித்தார். மாநில அரசுகளை வாட் வரியைக் குறைக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, நாட்டின் 14 மாநிலங்களில் வாட் வரிக் குறைக்கப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 குறைந்திருக்கிறது.

பூகம்பம், சுனாமிக்கு 1,550 பேர் பலி

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் செப்டம்பர் 28 அன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவுகோலில் 7.5) தாக்கியதால் ஏற்பட்ட சுனாமியில் 1,558 பேர் பலியானதாக இந்தோனேசிய அரசு தெரிவித்தது. இந்த நிலநடுக்கும், சுனாமியால் 70,000 வீடுகள் சிதைந்திருக்கின்றன. அந்நாட்டின் பேரிடர் நிர்வாகம், இந்த பூகம்பத்தால் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

ஹைப்பர்லூப் பயணிகள் கேப்ஸ்யூல்

உலகின் முதல் ‘ஹைப்பர்லூப் பயணிகள் கேப்ஸ்யூலை’ அமெரிக்காவின் ஹைப்பர்லூப் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பெயினில் அக்டோபர் 3 அன்று அறிமுகம் செய்திருக்கிறது. 2019-ம் ஆண்டிலிருந்து இந்த கேப்ஸ்யூல் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‘குவின்டெரோ ஒன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த கேப்ஸ்யூல் ஒருமணி நேரத்தில் 700 மைல்களைக் கடக்கும் வேகத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கிர் பூங்காவில் 23 சிங்கங்கள் பலி

குஜராத் கிர் தேசியப் பூங்காவில் கடந்த மாதத்தில் 23 ஆசிய சிங்கங்கள் மர்ம வைரஸ் தாக்குதலால் பலியாகியிருக்கின்றன. இதனால் குஜராத் வனத் துறை, கிர் தேசிய பூங்காவிலிருக்கும் சிங்கங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கிர் தேசிய பூங்காவில் 600 ஆசிய சிங்கங்கள் வசித்து வந்ததாக அம்மாநில வனத் துறை தெரிவித்திருக்கிறது.

மின் வழிக் கட்டணம்: இந்தியாவுக்கு 28-வது இடம்

உலக அளவில் மின் வழிக் கட்டணங்களை (e-Payments) நடைமுறைப் படுத்தும் அரசுகளில், 2018-ம் இந்திய அரசு 28-வது இடத்தில் இருப்பதாக எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் அக்டோபர் 3 அன்று தெரிவித்திருக்கிறது. 73 நாடுகள் இடம்பெற்றிருந்த ‘Government e-Payments Adoption Ranking’ என்ற தரவரிசைப் பட்டியலில் நார்வே அரசு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

ரயில் நிலைய மறுவளர்ச்சித் திட்டங்கள்

ரயில் நிலையங்களுக்கான மறுவளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை அக்டோபர் 3 அன்று ஒப்புதல் வழங்கியிருக் கிறது. ரயில் நிலையங்களில் வணிக வளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்தில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. நாட்டின் 600 ரயில் நிலையங்களில் நிறைவேற்றப்படவிருக்கும் மறுவளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

முதல் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் முதல் சபையைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அக்டோபர் 2 அன்று தொடங்கிவைத்தார். இந்தத் தொடக்க விழாவில் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கலந்துகொண்டார். இந்தச் சூரிய ஆற்றல் கூட்டணி வருங்காலத்தில் சர்வதேச ஆற்றல் வழங்குநரான ஒபெக் (Organization of the Petroleum Exporting Countries) அமைப்புக்கு மாற்றாக அமையும் என்று இந்த விழாவில் மோடி தெரிவித்தார்.

No comments: