CURRENT AFFAIRS - SEP 2018

பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து 6 சதவீதமும் டீசல் விலை 8 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. மும்பையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.01-க்கும் டீசல் ரூ.78.07-க்கும் செப்டம்பர் 15 அன்று விற்பனை செய்யப்பட்டது. இந்தியா 80 சதவீதக் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், எரிபொருள் இறக்குமதிக்கான விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

மாறிய பிளஸ் 2 மதிப்பெண்
தமிழ்நாட்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் அறிவித்ததுபோல் நடைபெற்றாலும், உயர்கல்விக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று மாநிலக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 15 அன்று தெரிவித்தார். உயர்கல்விக்குப் பன்னிரண்டாம் வகுப்பின் மொத்த மதிப்பெண்களான 600 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை?
தமிழ்நாட்டின் நிலக்கரி இருப்புக் கடுமையாகக் குறைந்திருப்பதால், உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு செப்டம்பர் 14 அன்று கடிதம் எழுதினார். தமிழ்நாட்டின் தினசரித் தேவையான 72,000 டன் நிலக்கரியை உடனடியாக வழங்குவதற்கு மத்திய நிலக்கரி, ரயில்வே அமைச்சகத்துக்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்று பழனிச்சாமி கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

விஞ்ஞானிக்கு இழப்பீடு
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், 1994 உளவு வழக்கில் கேரளக் காவல் துறையால் தேவையில்லாமல் கைது செய்யப்பட்டுக் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 14 அன்று தெரிவித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, எட்டு வாரக் காலத்துக்குள் கேரள மாநில அரசு நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாகத் தர உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏன் நம்பி நாராயணன் மீது குற்றம்சாட்டப்பட்டது என்று விசாரிக்க முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான மூவர் குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

மனித வளர்ச்சிப் பட்டியல்: 130-வது இடம்
உலக அளவில் 189 நாடுகள் இடம்பெற்ற மனித வளர்ச்சிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் (UNDP) செப்டம்பர் 14 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016-ம் ஆண்டில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) 0.624 ஆக இருந்த இந்தியாவின் மதிப்பு, 2017-ம் ஆண்டில் 0.640 ஆக உயர்ந்தது. இந்தியாவில் சுகாதாரம், கல்வி, வருமானம் போன்ற அம்சங்கள் கடந்த சில பத்தாண்டுகளில் உயர்ந்ததன் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்திலும் ஸ்விட்சர்லாந்து இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

ஒடுக்கப்படும் மனித உரிமை குழுக்கள்
இந்தியா, சீனா, ரஷ்யா, மியான்மர் போன்ற நாடுகள் மனித உரிமைக் குழுக்களையும் செயல்பாட்டாளர்களையும் கடுமையாக ஒடுக்குவதாக செப்டம்பர் 12 அன்று வெளியான ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுப்பவர்கள் கொலை, சித்திரவதை, தன்னிச்சையான கைது போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச் செயலாளரின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. சட்ட, அரசியல், நிர்வாகத் தடைகள் விதிக்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாவலர்கள் மிரட்டப்படுகின்றனர் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

அதிகரிக்கும் தற்கொலைகள்
2016-ம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 37 சதவீதப் பெண்களும் 24 சதவீத ஆண்களும் தற்கொலை மரணங்களால் இறந்திருப்பது செப்டம்பர் 12 அன்று வெளியான ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ‘குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் 1990-2016’ என்ற தலைப்பில் லான்செட் மருத்துவ இதழில் வெளியான இந்த முடிவில், இந்தியாவில் நடைபெற்ற தற்கொலை மரணங்களில் 63 சதவீதம் 15-39 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆண்கள், பெண்கள் என இருபாலினரிடமும் தற்கொலைகள் அதிகமாக ஏற்படுகின்றன.

எச்.ஐ.வி. எய்ட்ஸ் சட்டம்
மத்திய சுகாதார, குடும்பநலத் துறை அமைச்சகம், எச்.ஐ.வி. எய்ட்ஸ் (தடுப்பு, கட்டுப்பாடு) சட்டம் (2017) செப்டம்பர் 10 முதல் நாட்டில் அமலுக்குவந்ததாக அறிவித்தது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எதிரான பாகுபாடு சட்டப்படி குற்றம் என்ற இந்த மசோதாவை மாநிலங்களவை மார்ச் மாதம் நிறைவேற்றியது. தற்போது, இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதால் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு, சுகாதாரச் சேவைகள், கல்வி, பொதுச் சேவைகள், சொத்து உரிமைகள், காப்பீடு சேவைகள் போன்றவற்றை மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.

புதிய வடிவமைப்பு நிறுவனங்கள்
நாட்டில் புதிதாக நான்கு தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் அமைப்பதற்காக ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன்’ சட்டத்திருத்த (2014) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை செப்டம்பர் 12 அன்று ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம், ஆந்திராவில் அமராவதி, மத்தியப் பிரதேசத்தில் போபால், அசாமில் ஸோர்ஹாட், ஹரியாணாவில் குருக்ஷேத்ரா ஆகிய நான்கு நகரங்களில் தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் தொடங்கப்படவிருக்கின்றன. அகமதாபாத்தில் 1961-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தைப் போன்று புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கலப்பு மருந்துகளுக்குத் தடை
உடல்நலத்தைப் பாதிக்கும் அம்சங்கள் இருக்கக்கூடிய 328 கலப்பு மருந்துகளுக்கு (Fixed Dose Combinations) ‘மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய’த்தின் (DTAB) அறிவுரைப்படி, மத்திய சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 12 அன்று தடைவிதித்தது. மருந்துகள், ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் 26 A பிரிவின்படி, 2017-ம் ஆண்டில் 344 கலப்பு மருந்துகள் தடைசெய்யப்பட்டன. இதை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், ‘மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய’த்தை மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், தற்போது 328 கலப்பு மருந்துகளுக்குத் தடைவிதிக்குமாறு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

Comments