கடந்த வாரம் - 26.06.2018

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு
சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம், மத்திய அரசின் நிதி உதவியோடு 10,000 கோடி ரூபாய் செலவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தில் 15 சதவீதம் விவசாயம் நிலமாக இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும் மக்களும் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.

அரசுக் கல்லூரிகளில் இடம் அதிகரிப்பு
அரசின் கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரிப்பதற்கு, கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அரசாணை ஜூன் 20 அன்று வெளியிடப்பட்டுள்ளது. கலை, அறிவியல் படிப்புகளில் இந்த ஆண்டும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டிலேயே ரூ. 62 கோடியில் 264 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

ரயில் நிலைய செல்ஃபிக்கு அபராதம்
ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2,000 அபராதம் விதிக்கும் நடைமுறை ஜூன் 22 முதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. ரயில்களில் பயணம் செய்யும்போதும், ரயில் தண்டவாளங்களிலும் மக்கள் செல்ஃபி எடுப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கின்றன. இதைத் தடுப்பதற்காக தெற்கு ரயில்வே, ரயில் படிக்கட்டுகள், ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை ஆகியவற்றில் செல்ஃபி எடுக்கத் தடை விதித்துள்ளது. அத்துடன், ரயில் நிலைய வளாகத்தில் குப்பைத் தொட்டியைத் தவிர மற்ற இடங்களில் குப்பைப் போடுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி
ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டுவந்த மக்கள் ஜனநாயகக் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி, பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டதால் ஜூன் 19 அன்று முடிவுக்கு வந்தது. இதனால் காஷ்மீர் முதல்வராகப் பதவி வகித்துவந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக் கோரிய என்.என். வோஹ்ராவின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூன் 20 அன்று ஏற்றார். 2019 நாடாளுமன்றத் தேர்தல்வரை ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய இணைய நூலகம் தொடக்கம்
மத்திய மனித வளத்துறை அமைச்சகம், டெல்லியில் இந்திய தேசிய இணைய நூலகத்தை (National Digital Library of India) ஜூன் 19 அன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கிறது. இந்த இணைய நூலகத்தை ஐஐடி-கரக்பூர் வடிவமைத்திருக்கிறது. நாட்டின் 170 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட, 200 மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த இணைய நூலகத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள். இணையதளம் மட்டுமல்லாமல் அலைபேசிகளிலும் பயன்படுத்துமாறு இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நூலகத்தின் இணையதள முகவரி: https://ndl.iitkgp.ac.in/

தலைமைப் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா
நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால், தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜூன் 20 அன்று அறிவித்தார். மூன்று ஆண்டுகள் கொண்ட இவரது பதவிக் காலம் 16 அக்டோபர், 2014-ம் ஆண்டு தொடங்கியது. 2017-ம் ஆண்டு முடிவடைந்த இவரது பதவிக் காலம், மீண்டும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஐ.நா: பட்டினி கிடப்பவர்கள் அதிகரிப்பு
உலகில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஜூன் 20 அன்று வெளியான ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது. உலக நாடுகளின் மோதல்கள், பருவநிலை மாற்றம் போன்றவை பட்டினி கிடக்கும் மக்கள் அதிகரிக்கக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. உலகில் 2015-ம் ஆண்டில் 77.7 கோடியாக இருந்த பட்டினி கிடப்போர் மக்கள்தொகை, 2016-ம் ஆண்டில் 3.8 கோடி அதிகரித்து 81.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் 2018 என்ற அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட கொரியாவுக்கு மீண்டும் தடை: ட்ரம்ப்
வட கொரியாவின் அணு ஆயுதங்களால் அசாதாரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜூன் 22 அன்று மீண்டும் புதுப்பித்திருக்கிறார். இந்தப் பொருளாதாரத் தடைகள் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார். வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜூன் 12 சந்திப்பு நடைபெற்ற பத்து நாட்களில் அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு முரணாகப் பார்க்கப்படுகிறது.

Comments