Saturday 2 June 2018

கடந்து வந்த பாதை | மே 19 - 25 / 2018

கடந்து வந்த பாதை | மே 19 - 25


  1. நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கடந்தபிறகும் இதுவரை மின்சார வசதி பெறாத 4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின் வசதி ஏற்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். (மே 19)
  2. காங்கிரஸ் அணி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி 3 நாளில் முடிவுக்கு வந்தது. (மே 19)
  3. கியூபா நாட்டில் நடந்த விமான விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். (மே 19)
  4. நடப்பு ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் 20 வங்கிகளின் வாராக்கடன் 8.32 சதவீதமாக அதிகரித்தது. இந்த வங்கிகளில் 11 தனியார் வங்கிகளும், 9 பொதுத்துறை வங்கிகளும் அடங்கும். (மே 19)
  5. பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம் :
  6. மொரீஷியஸ் நாட்டில் தலைமை அலுவகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் அப்ரேஷியா பேங்க் தனது ஆய்வறிக்கை ஒன்றில் பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 6-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. (மே 20)
  7. ஒலியைவிட வேகமாகச் செல்லும் பிரமோஸ் ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோரில் வெற்றிகரமாக நடந்தது. (மே 21)
  8. இந்த நிதியாண்டில் (2018-2019) நடப்புக்கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்குக் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டது. (மே 21)
  9. கேரளாவில் வேகமாகப் பரவிய ‘நிபா’ வைரஸ் காய்ச்சலில் 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்தியக்குழு விரைந்தது. (மே 21)
  10. ரஷியாவின் சோச்சியில் அந்நாட்டு அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாட்டு உறவில் ஏற்பட்ட வளர்ச்சி மிகப் பெரிய சாதனை என்று மோடி புகழாரம் சூட்டினார். (மே 21)
  11. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை பலியானது. போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் காயமடைந்தனர். (மே 21)
  12. வெனிசூலா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். குறைந்த சதவீதமே வாக்குகள் பதிவானதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. (மே 21)
  13. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானார்கள். இதுபற்றி நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. (மே 22)
  14. துருக்கி நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் 104 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. (மே 22)
  15. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நடந்த பரபரப்பான முதலாவது தகுதிச்சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. (மே 22)
  16. தூத்துக்குடியில் 2-வது நாளாக கலவரம் நீடித்தது. பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. (மே 23)
  17. இ-விசா வசதியின் கீழ் வருகைதந்த வெளிநாட்டுப் பயணிகள் வாயிலாக மத்திய அரசுக்கு இதுவரை ரூ. 1400 கோடி வருவாய் கிடைத்துள்ளது. (மே 23)
  18. வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயைத் தாண்டியது. டீசல் ரூ. 72.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. (மே 23)
  19. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் திடீரென அறிவித்தார். (மே 23)
  20. கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்)-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலர்ந்தது. மாநிலத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி பதவியேற்றார். (மே 23)
  21. தமிழ்நாடு, புதுச்சேரியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். (மே 23)
  22. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மின்சார இணைப்பைத் துண்டிக்கவும், அந்த ஆலையை மூடவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. (மே 24)
  23. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக ரத்து செய்துவிட்டார். (மே 24)
  24. மேற்கு வங்காள மாநிலம் சாந்திநிகேதனில் நடைபெற்ற விஸ்வ பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘கல்வித்துறையை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடியை செலவிடுவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது’ என்றார். (மே 25)
  25. தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சில அதிரடி உத்தரவு களைப் பிறப்பித்தது. சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. (மே 25)
  26. கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றது. முன்னதாக சட்டசபையில் இருந்து பாரதீய ஜனதா வெளிநடப்புச் செய்தது. (மே 25)
  27. கிம்முடனான சிங்கப்பூர் சந்திப்பை டிரம்ப் ரத்து செய்தது மிகவும் வருந்தத்தக்கது, அமெரிக்காவுடன் எப்போதும் பேசத் தயார் என வடகொரியா அறிவித்தது. (மே 25)

No comments: