ஏழு வள்ளல்கள்..! சங்க காலத்தில் வாரி வாரி வழங்கிய பல தமிழ் மன்னர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களுள் மிக சிறப்பு வாய்ந்த வள்ளல்கள் ஏழு பேர்.

ஏழு வள்ளல்கள்..! சங்க காலத்தில் வாரி வாரி வழங்கிய பல தமிழ் மன்னர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களுள் மிக சிறப்பு வாய்ந்த வள்ளல்கள் ஏழு பேர். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்..!

1. பேகன் - ஆற்றலும், அழகும் நிறைந்தவன், பெரிய மலை நாட்டுக்குத் தலைவனாக இருந்தவன் பேகன். மழை ஓயாது பொழியும் வளமிக்க மலைச் சாரலில், காட்டுப் பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது கருமேகங்களைக் கண்டு ஆடிக் கொண்டிருந்த மயில், குளிரில் நடுங்குவதாக எண்ணி தனது போர்வையை அதன் மீது போர்த்திவிட்டான். இதனால் இவன் மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என சிறப்புடன் அழைக்கப்பட்டான்.

2. பாரி - பறம்பு மலை பகுதியை ஆண்ட மன்னன். மணம் வீசும் மலர்களை உதிர்க்கின்ற புன்னை மரங்கள் நிறைந்த நெடிய வெளியில், பற்றுக்கொம்பு இல்லாமல் காற்றில் ஆடிக்கொண்டிருந்த முல்லைக் கொடிக்குத் தனது பெரிய தேரை படர்வதற்காக அருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன். ஆகவே இவன் முல்லைக்குத் தேர் ஈந்த பாரி’ என பெயர் பெற்றான்.

3. காரி - தன்னை நாடி வந்த வருக்கு, அன்பு நிறைந்த சொற்களை கொடுத்தவன் காரி. பகைவர் கண்டு அஞ்சுகின்ற சினத்தீ விளங்கும் ஒளி வீசும் நீண்ட வேலினை உடையவன் அவன். வீரக்கழலும், வளையும் அணிந்துள்ள பெரிய கைகளை உடையவனுமாக திகழ்ந்தான் காரி. வீரம் மிகுந்த அவனும் வள்ளல்தன்மையிலும் சிறப்புற்று விளங்கினான்.

4. ஆய் - வில்லைத் தாங்கிய, சந்தனம் பூசி உலர்ந்த வலிமை மிக்க தோளினை உடையவனும், அன்பான மொழிகளைப் பேசியவனுமாகிய மன்னன் ஆய், பொதியமலைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளையும், நிலப்பகுதிகளையும் ஆண்டு வந்த குறுநில மன்னன். இவன் எப்போதும் வில்லும், அம்பும் கையுமாக திரிபவன். உதவி வேண்டி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாமல் பொருள் வழங்கினான். இவனைத் ‘திண் தோள் ஆர்வ நன்மொழி ஆய்!’ எனப் போற்றினர்.

5. அதியமான் - மேகம் தங்கும் மலையில் மணம் வீசும் மலர்கள் மலர்ந்திருக்கும் மலைச்சாரலில் அழகிய நெல்லி மரத்தில் அமிழ்தாக விளைந்த இனிய நெல்லிக் கனியை அவ்வைக்குக் கொடுத்தவன். இதனால் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் என எல்லோராலும் போற்றப்பட்டான். பகைவரை அழிப்பதற்கு உறுதியோடு எழுந்த சினத்தீயும், ஒளி மிக்க நெடிய வேலும் ஆரவாரமிக்க கடல் போன்ற படையும் கொண்டவன் அதியமான். இவனது ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை போரிலேயே கழித்துள்ளான் என்பதை இவன் வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. வாள் வீச்சில் இவனை வெல்ல யாரும் கிடையாது என்பார்கள்.

6. நள்ளி - தன்னிடம் இருக்கும் பொருளை மறைக்காது அன்பு காட்டுவோர் மனம் மகிழுமாறு, அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கான பொருளைக் குறைவின்றிக் கொடுத்தவன். போர் செய்வதில் வல்லவன். மழை பொழிவதற்குக் காரணமான, காற்று தங்குகின்ற நெடிய குவடு களைக் கொண்ட பெருமை பொருந்திய மலை நாட்டுக்குத் தலைவன்தான் நள்ளி. இவன் போர் முனையில் எப்படி கைகள் முன்னால் நிற்குமோ, அதுபோல் மலைவாழ் மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் வழங்கிப் புகழ்பெற்றவன்.

7. ஓரி - நறுமணம் வீசும் அரும்புகளைக் கொண்டுள்ள இளமையான உயர்ந்த புன்னை மரங்களையுடைய சிறிய மலைகளைக் கொண்ட நல்ல நாடுகளைக் கூத்தர்களுக்கு அளித்தவன். பிடரி மயிர் அமைந்த குதிரையினை உடையவன் ஓரி. மலை நாட்டைச் சேர்ந்த வல்வில் வீரனான ஓரி போர் முனையில் வெற்றிபெற்று புகழுடன் விளங்கியவன். காரியை போரில் வென்ற பெரும் வள்ளல் எனப் போற்றப் பட்டான்.

கு.சாருநிஷா, 10-ம் வகுப்பு,மகரிஷி வித்யா மந்திர்,சேத்துப்பட்டு, சென்னை.

Comments