கடந்து வந்த பாதை | பிப்ரவரி 17- 23 | 
 • பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது : மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் நடந்த ரூ. 11,700 கோடி மோசடி தொடர்பாக வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். (பிப்ரவரி 17)
 • கர்நாடக அரசு எதிர்ப்பு : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இவ்விஷயத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். (பிப்ரவரி 17)
 • நாட்டின் சேவைகள் ஏற்றுமதி உயர்வு : நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, நடப்பு 2017- 2018-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்- டிசம்பர்) 12,588 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 5 சதவீத வளர்ச்சியாகும். (பிப்ரவரி 17)
 • மலையில் விமானம் மோதியதில் 66 பேர் பலி : ஈரானில் உள்ள மலையில் மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 66 பேர் பலியாகினர். (பிப்ரவரி 18)
 • திரிபுரா தேர்தலில் 74 சதவீத வாக்குப்பதிவு : திரிபுரா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. (பிப்ரவரி 18)
 • தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை : தமிழ்நாட்டில் 43 கல் லூரிகளில் முதல் பருவத்தேர்வில் ஒரு மாணவர்கூட வெற்றி பெறாத நிலையில், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நட வடிக்கையில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் இறங்கியது. (பிப்ரவரி 18)
 • 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி : ஜோகன்னஸ்பர்க்கில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 18)
 • திருப்பதி அருகே ஏரியில் 7 பேர் மர்மச் சாவு : திருப்பதி அருகே ஏரியில் 7 பேர் உடல்கள் மிதந்தது பற்றி போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. (பிப்ரவரி 18)
 • 200 போலி நிறுவனங்கள் குறித்து விசாரணை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி விவகாரத்தில் 200 போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துகள் குறித்து அமலாக்கத் துறை மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். (பிப்ரவரி 18)
 • கச்சா வைரம் இறக்குமதி அதிகரிப்பு : நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் கச்சா வைரம் இறக்குமதி 11 சதவீதம் அதிகரித்து 1,553 கோடி டாலராக உள்ளது என நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்தது. (பிப்ரவரி 19)
 • சபர்மதி ஆசிரமம் சென்ற கனடா பிரதமர் : அரசு முறை பயணமாக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குஜராத்தில் உள்ள காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்துக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு அவர்கள் ராட்டையில் நூல் நூற்று மகிழ்ந்தனர். பின்னர் அக்‌ஷர்தாம் கோவிலில் அவர்கள் வழிபாடு செய்தனர். (பிப்ரவரி 19)
 • சிரியாவில் 94 அப்பாவி மக்கள் கொன்று குவிப்பு : சிரியா உள்நாட்டுப் போரில், அதிபர் படை நடத்திய கடும் தாக்குதலில் ஒரே நாளில் 94 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம் நடந்தது. (பிப்ரவரி 20)
 • 900 புள்ளிகளைக் கடந்து கோலி சாதனை : ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தார். பந்துவீச்சாளர்களின் வரிசையில் இந்தியாவின் பும்ரா, ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் ஆகியோர் கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர். (பிப்ரவரி 20)
 • இந்திய ஆக்கி அணிக்கு சர்தார்சிங் கேப்டன் : அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சர்தார்சிங் நியமிக்கப்பட்டார். (பிப்ரவரி 20)
 • மத்திய தொல்லியல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு : தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மத்திய தொல்லியல் துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. (பிப்ரவரி 20)
 • தொழிலதிபர் விக்ரம் கோத்தாரி கைது : பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடன், வட்டி ரூ. 3,695 கோடியை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விக்ரம் கோத்தாரியை சி.பி.ஐ. கைது செய்தது. (பிப்ரவரி 20)
 • கமல்ஹாசனின் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’ : மதுரையில் நடைபெற்ற விழாவில், நடுவில் நட்சத்திரத்துடன், 6 கைகள் கோர்த்த படத்துடன் கூடிய கொடியை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். (பிப்ரவரி 21)
 • அன்னிய நேரடி முதலீடு 3,594 கோடி டாலர் : நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அன்னிய நேரடி முதலீடாக 3,594 கோடி டாலர் ஈர்க்கப்பட்டிருக்கிறது. முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 0.27 சதவீதம் மட்டுமே அதிகமாகும். (பிப்ரவரி 21)
 • 2-வது 20 ஓவர் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி : செஞ்சூரியனில் இந்தியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. (பிப்ரவரி 21)
 • பிரதமர் மோடியைச் சந்திக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு : முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (பிப்ரவரி 22)
 • பாகிஸ்தான் தூதரக அதிகாரி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை : இந்திய இறையாண்மைக்கு எதிராக சதியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி உள்பட 3 பேர் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு போலீசார் பூந்தமல்லி கோர்ட்டில் கூடுதலாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். (பிப்ரவரி 22)
 • கட்சித்தலைவர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் தகுதிநீக்கம் : கட்சித் தலைவர் பதவியில் இருந்து சுப்ரீம் கோர்ட்டால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அரசியலில் இருந்து தன்னை ஒழித்துக்கட்ட சதி நடப்பதாகக் கூறினார். (பிப்ரவரி 22)
 • இந்திய பெண்கள் ஆக்கி அணிக்கு ராம்பால் கேப்டன் : தென்கொரியா போட்டித் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டார். (பிப்ரவரி 23)
 • டெல்லி முதல்-மந்திரி வீட்டில் போலீஸ் சோதனை : டெல்லியில் மாநில தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். (பிப்ரவரி 23)
 • ‘எச்-1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : ‘எச்-1 பி’ விசா பெற புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வந்தது. அதன் காரணமாக இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. (பிப்ரவரி 23)
 • மோடி- கனடா பிரதமர் 2 மணி நேரம் பேச்சு : பிரதமர் மோடியும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் டெல்லியில் சந்தித்துப் பேசினர். 2 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களின் முன்னிலையிலும் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (பிப்ரவரி 23)
 • ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ராஜினாமா முடிவு : பாலியல் குற்றச்சாட்டால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பர்னபி ஜாய்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய முடி வெடுத்தார். (பிப்ரவரி 23)

Comments