Friday 22 December 2017

சரித்திரம் படைத்த கருண்நாயர் | முச்சதம் அடித்து கலக்கல்

சரித்திரம் படைத்த கருண்நாயர்


* கர்நாடகா ரஞ்சி அணிக்காக விளையாடி வரும் 25 வயதான கருண்நாயர் முச்சதம் (ஆட்டம் இழக்காமல் 303 ரன்) அடித்து கிரிக்கெட் உலகின் அனைவரையும் வியக்க வைத்ததுடன் பல்வேறு சரித்திரங்கள் படைத்தார். டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்திய வீரர்களில் ஷேவாக் மட்டுமே முச்சதம் (இரண்டு முறை) அடித்து இருக்கிறார்.

* முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை தனதாக்கிய கருண்நாயர் 5 மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பெற்றுள்ளார். குறைந்த இன்னிங்சில் (3-வது டெஸ்டில்) முச்சதம் அடித்து சாதனை படைத்த கருண்நாயர் இளம் வயதில் முச்சதம் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

* நேற்று ஒரேநாளில் கருண்நாயர் 232 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தார்.

* இங்கிலாந்து அணிக்கு எதிராக முச்சதம் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற புகழும் கருண்நாயரின் பெயருடன் இணைந்தது.

* இந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய வீரர் அஸ்வின் 25 விக்கெட்டும், 300 ரன்களுக்கு மேலும் எடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகள் மற்றும் 300 ரன்களை குவித்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

* சென்னை டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது தான் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி குவித்த அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 726 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்னும் அது தான். முன்பு 2007-ம் ஆண்டில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 664 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்னும் இதுவாகும். 1985-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 652 ரன்கள் குவித்ததே இங்கு அதிகபட்சமாக இருந்தது.




இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கருண்நாயர் ஆட்டம் இழக்காமல் முச்சதம் அடித்து அசத்தினார். சென்னை டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக மொயீன் அலி 146 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளிவிஜய் 17 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். விஜய் 29 ரன்னில் அவுட் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. கருண்நாயர், முரளி விஜய் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். 3-வது டெஸ்டில் ஆடும் கருண்நாயர் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி விளாசி தனது முதல் சதத்தை (185 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எட்டினார். அடுத்த ஓவரில் முரளிவிஜய் (29 ரன்) டாவ்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவர் அவுட் என்று அறிவித்ததை எதிர்த்து முரளிவிஜய் செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து தமிழக வீரரான அஸ்வின், கருண்நாயருடன் இணைந்தார். சதத்தை கடந்த பிறகு கருண்நாயரின் ஆட்டத்தில் வேகம் அதிகரித்தது. அஸ்வின், மொயீன் அலி வீசிய ஓவரில் ஒரு சிக்சர் பறக்க விட்டார். கருண்நாயர் எல்லா பந்து வீச்சாளர்களையும் ஒரு கைபார்த்தார். ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி, அடில் ரஷித், ஜாக்பால் உள்ளிட்டோர் பந்து வீச்சில் சிக்சர் தூக்கிய கருண்நாயர் பந்தை நாலாபுறமும் விரட்டியடித்தார். ஜென்னிங்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து கருண்நாயர் இரட்டை சதத்தை (306 பந்துகளில்) எட்டினார். கருண்நாயர் அபாரம் சிறப்பாக ஆடிய அஸ்வின் (67 ரன்கள், 149 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் ஜோஸ்பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரவீந்திர ஜடேஜா களம் இறங்கினார். இரட்டை சதம் அடித்த பிறகு கருண்நாயர் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் பந்துகளை எல்லா திசைகளிலும் விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவருடன் இணைந்த ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்குக்கு ஜமாய்த்தார். இருவரும் கடைசி கட்டத்தில் ஒருநாள் போட்டியை ஞாபகப்படுத்துவதை போல் அதிரடி காட்டினார்கள். 55 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா, டாவ்சன் பந்து வீச்சில் ஜாக்பாலிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து உமேஷ்யாதவ், கருண்நாயருடன் ஜோடி சேர்ந்தார். இந்தியா 759 ரன்னுக்கு டிக்ளேர் அடுத்த ஓவரில் அடில் ரஷித் வீசிய பந்தை கருண்நாயர் பவுண்டரிக்கு விரட்டி முச்சதத்தை கடந்தார். அத்துடன் இந்திய அணி முதல் இன்னிங்சில் 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கருண்நாயர் 381 பந்துகளில் 32 பவுண்டரி, 4 சிக்சருடன் 303 ரன்கள் குவித்தும், உமேஷ்யாதவ் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். முச்சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய கருண்நாயர் பெவிலியன் திரும்பிய போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். 282 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ரன் எடுத்தது. கேப்டன் குக் 3 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாள் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. கடைசி நாளில் சுழற்பந்து வீச்சு அதிகம் எடுபடும். சுழலை தாக்குப்பிடித்து தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தொடரை வெற்றியுடன் முடிக்க இந்திய அணி முனைப்பு காட்டும். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.