Friday 22 December 2017

முக்கிய நிகழ்வு - டிசம்பர் 25- 31, 2016



கடந்து வந்த பாதை | டிசம்பர் 25- 31 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

* ரொக்கமில்லா பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 2 பரிசுத் திட்டங்களை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, வியா பாரிகளுக்கு வருமான வரிச் சலுகையையும் அறிவித்தார். (டிசம்பர் 25)

* பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் கட்டாயத் தேர்ச்சி முறை இருக்கக் கூடாது என்ற பரிந்துரைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. (டிசம்பர் 25)

* சபரிமலை அய்யப்பன் கோவிலில் தடுப்புக் கயிறு அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். (டிசம்பர் 25)

* எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைதான 220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்தது. (டிசம்பர் 25)

* சிரியாவுக்கு புறப்பட்டுச் சென்ற ரஷிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 92 பேரும் பலியாகினர். (டிசம்பர் 25)


* தமிழகத்தில் வருமானவரி சோதனைக்கு துணை ராணுவத்தைப் பயன்படுத்திய மத்திய அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்தது. (டிசம்பர் 26)

* ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில், 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. (டிசம்பர் 26)

* நாட்டை அழித்துவிட்ட ஊழலுக்கு எதிரான யுத்தம் தொடரும் என டேராடூனில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். (டிசம்பர் 27)

* சென்னையில் வருமான வரி சோதனைக்கு உள்ளான ராமமோகன ராவ், தான் இன்னும் தலைமைச் செயலாளராக நீடிப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். (டிசம்பர் 27)

* தனிநபர் வருமானவரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தினர். (டிசம்பர் 27)

* வார்தா புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிடுவதற்காக வந்த மத்தியக் குழுவினர் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் ஆய்வு செய்தனர். (டிசம்பர் 28)

* வார்தா புயலால் தமிழகத்துக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு மத்திய அரசுக்கு உடனே அறிக்கை வழங்க வேண்டும் என்று மத்தியக் குழுவிடம் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். (டிசம்பர் 28)

* ரொக்கமற்ற பணப் பரிமாற்றத்துக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகும் சேவை வரிவிலக்கு நீடிக்க வேண்டும் என்று முதல்-மந்திரிகள் குழு சிபாரிசு செய்தது. (டிசம்பர் 28)

* சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். (டிசம்பர் 29)

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகங்கள் உள்ளன என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ். வைத்தியநாதன் கருத்துத் தெரிவித்தார். (டிசம்பர் 29)

* வார்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளை மத்தியக் குழுவினர் 2-வது நாளாக ஆய்வு செய்தனர். (டிசம்பர் 29)

* மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறைத் தண்டனை விதிக்க வகையும் செய்யும் அம்சத்தை அவசரச் சட்டத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியது. (டிசம்பர் 29)

* வங்கிகளில் ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியல் வருமான வரித்துறையினருக்குக் கிடைத்துள்ளது, கருப்புப் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய அரசு எச்சரித்தது. (டிசம்பர் 29)

* உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் திடீரென்று நீக்கப்பட்டார். அங்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சியின் தலைவர் முலாயம் சிங் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். (டிசம்பர் 30)

* புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கிவைத்த வழக்கில் கைதான சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்துவிட்டது. (டிசம்பர் 30)

* ஆதார் அட்டையைப் பயன்படுத்தி கை பெருவிரல் ரேகை மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் முறை விரைவில் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். (டிசம்பர் 30)

* அருணாசல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டு உள்பட 7 பேர் அருணாச்சல் மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். (டிசம்பர் 30)

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், ரஷிய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டார். (டிசம்பர் 30)

* புத்தாண்டு தினத்தையொட்டி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகள், சிறு வியாபாரிகள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தார். (டிசம்பர் 31)

* அருணாசல பிரதேசத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் கட்சி தாவியதால் அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது. (டிசம்பர் 31)

* இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக பிபின் ராவத் டெல்லியில் பதவியேற்றார். (டிசம்பர் 31)
Tag: * Prime Minister Modi addressing nationwide televisions on New Year Day, announced new concessions to farmers, small traders, pregnant women and senior citizens. (December 31) * Arunachal Pradesh ruling Arunachal Pradesh People's party MLAs have thrown the party, where the Bharatiya Janata regime was there. (December 31) * Bipin Rawat became the new Army commander of the Indian Army. (December 31)

No comments: